ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துவரும் நிலையில், தற்போது ரஷ்யா மீதும் தாக்குதல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளமை புதிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தலைநகர் மொஸ்கோவின் மத்திய பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு அருகில் ஆளில்லா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொஸ்கோவின் தென் பிராந்தியத்தில் உள்ள கட்டடமொன்றின் மீது இரண்டாவது ஆளில்லா விமானம் மோதியுள்ளது.
மொஸ்கோ மீதான இரண்டு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரைய்மியா பிராந்தியத்தில் உள்ள வெடிமருந்து களஞ்சியம் மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இப்பிராந்தியம் மீது செலுத்தப்பட்ட 11 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே துறைமுக நகரான ஒடேசாவிலுள்ள தானிய களஞ்சியம் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக கியேவ்வின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.