பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று (5) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், நேற்றய தினம் (05) பிற்பகல் 4.30 முதல் அமுலாகும் வகையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அதற்கான கால அவகாசம் பெறும் பொருட்டு இந்தத் தடை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.