பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்ட விண்கலங்கள் 2028ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதையடுத்து, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ரொக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் திகதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் 20 கிமீ இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.
தொடர்ந்து இவற்றின் தூரம் படிபடியாக குறைக்கப்பட்டு ஜனவரி 7ம் திகதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விண்வெளியில் வலம்வரும் ஸ்பேடெக்ஸ் விண்கலன் தனது கேமரா மூலம் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை இஸ்ரோ நேற்று முன்தினம் (04) வெளியிட்டது.
இதற்கிடையே, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க இருக்கின்றன.
அவற்றில் இஸ்ரோ வடிவமைத்த ரோபோட்டிக் ஆர்ம், கிராப்ஸ் ஆகிய ஆய்வுக் கருவிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது,விண்வெளி சூழலில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட கிராப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து அவை வளர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எஞ்சியுள்ள கருவிகளும் தனது ஆய்வை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன என தெரிவித்துள்ளனர்.