இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (07) அறிவித்துள்ளது.
எனினும் அவர் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, டிசம்பரின் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அநுர குமார திஸாநாயக்க செப்டம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது முதல் விஜயமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அத்துடன் திசாநாயக்க பொறுப்பேற்றவுடன் கொழும்புக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் ஆவார்.
பிரதமர் மோடி 2015 முதல் 2017 வரை இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
திஸாநாயக்க விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நேற்று (07) அறிவித்தார்.