மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் கழிவுகள் இவ்வாறு பிளாஸ்டிக், கண்ணாடி போத்தல்கள், விலங்கு கழிவுகள் போன்றவற்றை வீசி வருகின்றனர்.
குறிப்பாக குருக்கள்மடம், பெரிய கல்லாறு, துறைநீலாவணை போன்ற பல கிராமங்களினை ஊடறுத்து செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும் சுகாதார ஆர்வலர்களும், சுற்றாடல் துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கழிவுகள் தொடர்ந்து வீசப்படுவதனால் நீரேந்து பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு,வீதியை பயன்படுத்துவதனால் பல்வேறு நோய்கள் உருவாகும் சாத்திய கூறுகள் காணப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் ச.அறிவழகன் தெரிவிக்கையில்,
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெளிப்பிரதேசங்களை சேர்ந்த நபர்களே மோட்டார் வண்டிகளிலும், முச்சக்கர வண்டிகளிலும் குப்பைகளை வீச வருகின்றனர்.
அவர்களின் ஒரு சிலரை நான் கையும் மெய்யுமாக அவர்கள் குப்பைகள் வீசும் போது அவர்களை கண்டித்தும் விட்டு இருக்கிறேன்,எனினும் இவ்வாறு கழிவுகளை வீதியின் மருங்களில் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு கொட்டப்படும் வீதியின் மருங்கிலும் இது குப்பை கொட்டுவதற்குரிய இடம் என விளம்பரப்படுத்தியுள்ளோம் மேலும் இன்னும் சில இடங்களில் இவ்வாறான பதாகைகளினை விளம்பரப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு காணப்படும் இடங்களை பக்கோ இயந்திரம் கொண்டு துப்பரவு செய்துள்ளோம் மேலும் இவ்வாரமும் இக் கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்தும் ஈடுப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.