ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹவா சுன்யிங் அறிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்றையதினம்(10) செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இம்மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த விஜயமானது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும். அத்துடன் இந்த விஜயமானது, சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஸி ஜின்பிங், அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பிரதமர் லி கியாங் மற்றும் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திக்கவுள்ளார்கள்.
சீனா – இலங்கை மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் தொடர்ச்சியான புதிய முன்னேற்றத்திற்காகவும், இரு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையிலும், இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் மூலம் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹவா சுன்யிங் தொடர்ந்தும் குறப்பிட்டுள்ளார்.