கடந்த 11ம் திகதி அன்று சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் இலங்கை முஸ்லிம்களுக்கான புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான இரு அரசாங்கங்களின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவிற்கு சென்ற அமைச்சர் செனவி, கையொப்பமிடுவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கை குடிமக்களுக்கான ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களையும், மென்மையான மற்றும் திறமையான புனித யாத்திரை செயல்முறையை நோக்கமாகக் கொண்ட திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சவூதிக்கான ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்ஃபிக் ஃபவ்ஸான் அல்ராபியாவையும் அமைச்சர் செனவி சந்தித்துள்ளார்.
மேலும் ஹஜ் சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார். இந்தக் குழு, புனித நபிகள் நாயகத்தின் நகரமான மதீனாவையும், ஜித்தா மற்றும் மதீனாவில் உள்ள முக்கியமான கலாச்சார தளங்களையும் பார்வையிட்டுள்ளது. அமைச்சர் ஜித்தாவில் உள்ள இலங்கை சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக் குழுவில் தேசிய ஒருங்கிணைப்புத் துணை அமைச்சர் முனீர் முளப்பர், சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத், முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறையின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.நவாஸ், ஜித்தாவில் உள்ள செயல் தூதர் மஃபூசா லாபீர் மற்றும் ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எம்.என்.எம். அஷ்ரப் ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.