மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மருந்து இறக்குமதி தொடர்பில் நிறுவனமொன்று மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் விசாரணை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார தரத்தை பரிசோதிக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில், இவ்வாறான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், இதுவரையில் ஏதாவதொரு குற்றாச்சாட்டு இருந்தால் மாத்திரமே பரிசோதனைகளை முன்னெடுத்துவருகிறோம். ஆனால் அந்த பரிசோதனைகள் போதாது. அதற்கமைய ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை அமைப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், சுகாதார அமைப்பு அரசால் நடத்தப்படுவதாலும், மருந்துகளின் விநியோகம் மையப்படுத்தப்பட்டதாலும், அதன் கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளை விட மிகப் பெரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.