கம்பளை – தவுலகல பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் இன்று(13) காலை மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவியும், கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரையும் இன்று காலை அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அம்பாறை பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றிற்குள் இருக்கும் போது இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
மாணவியைக் கடத்திய பின்னர், சந்தேக நபர் அவரை அம்பாறை பகுதிக்கு அழைத்துச் சென்று, பல இடங்களில் மூன்று முச்சக்கர வண்டிகளில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை, சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, அம்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கண்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, அமைதியாக இருக்கும்படி மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.