மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து அதனை விற்பனை செய்யும் இடமொன்றை சுற்றிவளைத்த புத்தளம் தலைமையக பொலிஸார், பாகங்களாக பிரிக்கப்பட்ட சில மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களுடன் சந்தேக நபரை நேற்று (12) கைதுசெய்துள்ளனர்.
குறித்த இடம் மரத் தளபாடங்கள் செய்யும் இடமாக பராமரித்து, அதில் ஒரு பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கழற்றி பாகங்களாக பிரித்து வைத்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
புத்தளம், மன்னார் வீதியின் 4ம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (11) இரவு இளைஞன் ஒருவரின் 4 இலட்சம் பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
இதுதொடர்பாக சில சி.சி.ரி.வி கெமராக்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையின் போது, திருடப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிளை சந்தேக நபர் வழங்கியதாக கூறப்படும் இடத்தை இளைஞர்கள் குழு சுற்றிவளைத்ததுடன், புத்தளம் பொலிஸாரின் உதவியுடன் அங்கு தேடிப்பார்த்த போது திருடப்பட்ட பலசர் ரக மோட்டார் சைக்கிள் அங்கு இருந்தமையும் கண்டுபிடித்துள்ளனர்.
புத்தளம் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவ்விடத்தினுள் நுழைந்து சோதனையிட்ட போது, 11 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் ஏற்கனவே பல பாகங்களாக உடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அந்த இடத்தில் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாகங்களாக அகற்றப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
மேலும் சில மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளும் ஆங்காங்கே வீசப்பட்ட நிலையில் அந்த இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல பாகங்களாக உடைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதா அல்லது வேறு என்ன காரணங்களுக்காக இந்த இடத்தில் இவ்வாறு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.