சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு, ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும், விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.
இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், பொங்கல் வாழ்த்துக்களையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோன்று இன்று அதிகாலைமுதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.