தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கில் மக்கள் மத்தியில் சில அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கள்வர்களையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும் பிடித்து நாட்டினை தூய்மைப்படுத்த வேண்டியவர்கள் பஸ்களில் தோரணங்களை களட்டி தூய்மைப்படுத்தமுனைவதாகவும் அவர் தெரிவித்தார்.
தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு மட்டக்களப்பு செட்டிபாளயம் வீரம்மா காளி ஆலய விசேட தைப்பொங்கல் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிகள் வழங்கினால் உடனடியாக அமெரிக்க டாலருக்கு இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து, அமெரிக்க டாலருக்கான பெறுமதி அதிகரிக்கும், விலைவாசிகள் அதிகரிக்கும்.
இவ்வாறான பிரச்சினைகள் வருகின்ற போது புதிய அரசியல் அமைப்பு ஒன்று இதன் ஊடாக உருவாக்கக்கூடிய வகையாக மக்களுடைய ஆதரவு அரசுக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருக்கின்றது. ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று திட்டத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த சில திட்டங்களை பற்றி தெற்கிலே மக்களுக்கு பாரிய அதிருப்தி இருக்கின்றது.
ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று வாகனங்களில் இருக்கின்ற பேருந்தில் கண் தெரியாத அளவிற்கு வைத்திருந்த விடயங்களை அகற்றுவது நல்ல விடயங்கள் தான் அது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த கிளீன் ஸ்ரீலங்கா எவ்வாறு என்றால் ஊழல்வாதிகளை கிளீன் பண்ணுவார்கள், கொலை செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள், களவு செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள் ஆனால் அதை விட்டுவிட்டு வாகனங்களில் தொங்கி இருக்கும் சிலைகளையும் வாகனத்தை அழகு படுத்துவதற்காக வைத்திருந்த பொம்மைகளையும் அகற்றுவது இல்லை.
அதாவது கொலைகாரனையும், கொள்ளைக்காரனையும், கப்பம் வாங்கியவனையும், பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டவனையும், சீனி மோசடி என்ற எத்தனையோ மோசடிகள் இவ்வாறு காணப்படுகின்றது.
அந்த பட்டியலை எடுத்து கிளீன் பண்ணுவார்கள் என்று பார்த்தால் முச்சக்கர வண்டிகளில் அடித்து இருக்கின்ற ஸ்டிக்கர்களையும் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணுவதை எல்லாம் பார்த்து மக்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் ஒரு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்குகின்ற நேரம் மூன்று வருடத்தில் தான் அரசியலமைப்பின் வேலைகள் பூர்த்தியாகும் என்றால் அந்த நேரத்தில் அதை செய்யும் அளவிற்கு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது. அந்த வகையில் நாங்கள் பூரணமான அழுத்தங்களை இதற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் வழங்குவோம்- என்றார்.