தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் சுற்றுலா பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவருடைய சடலம் பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிறிதளவு காயமடைந்த சுற்றுலா பயணிகள் 9 பேர் பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காயமடைந்த நால்வர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.