இலங்கையில் குற்றங்களை செய்தமைக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களை இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாய் மற்றும் மூன்று நாடுகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருக்க பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலை சர்வதேச பொலிஸாரிடம் சமர்ப்பிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மையில் மும்பையில் வைத்து போதைப்பொருள் கடத்தல்காரரும், பிணையில் வெளிவந்த ஒரு குற்றவாளியுமான ஜனித் மதுஷங்காவை இந்திய பொலிஸார் கைது செய்தனர்.
அதேவேளை கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடந்த 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 6 குற்றக் கும்பல்களுக்கு இடையில் நடந்தமைக்கான ஆதாரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.