அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 5 வான்கதவுகளை தலா 6 அங்குலம் வீதம் திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திறப்புகளை 12 அங்குலமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேனாநாயக்க சமுத்திரத்தைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் மழை அதிகரித்தபோது வீதியை ஊடுருவி வெள்ள நீர் சிறியளவில் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
கடந்த வருடம் அவ்வீதியில் வெள்ள நீர் அதிகரித்து காணப்பட்டபோது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இக்காலப்பகுதியில் காரைதீவு தொடக்கம் மாவடிப்பள்ளி புதிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரை பிரயாணிகள் கடந்த காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
மழை அதிகரிக்கும்போது வீதியை மூடும்படி வெள்ள நீர் பாய்ந்தோடுவது மட்டுமன்றி, அங்கு பாம்பு, முதலை, ஆமை போன்ற உயிரினங்களின் நடமாட்டமும் அதிகரித்து மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, அவ்வீதியில் மக்களை பாதுகாக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் கொட்டும் மழையிலும் பாதுகாப்புக் கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் தாழ் நிலங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் விடுத்துள்ளது.
குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மதரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.