மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து சமயத்தையும்,இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும்,கேவலமான வார்த்தைகளை முக நூலில் பதிவிட்டமையை கண்டித்து அவருக்கெதிராக இந்து சமய கலாச்சார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அவர் பேசுகின்ற வார்த்தை சைவக் குருமார்கள் இந்துக் குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு இந்த வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். ஆகவே இந்த புனிதமான திருநீற்றையும் அணிகின்ற சைவ மக்களையும் அந்தனர்களாக இருக்கட்டும் அல்லது சைவ சமய தீட்சை பெற்றவர்களாக இருக்கலாம் ஆலய தர்ம கர்த்தாவாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் எங்களது சமயத்திலே சமய தீட்சை பெற்றவர்களாகும்.
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு அங்கங்களுக்கும் திருநீறை பூசுகின்ற வழக்கம் இருக்கின்றது. இதிலும் குறிப்பாக அங்கு ஒருவன் இருப்பான் என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆகவே இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளை பேசுபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். இதுபோன்ற கேவலமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும்.ஆகவே அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும்.
இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியோ, இந்து கலாச்சார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படா விடின், கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புக்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் நாங்கள் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம் என தங்களது ஊடக அறிக்கையில் தெரிவித்தனர்.