கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் இருதரப்பினருக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத் தின் போதே நாமல் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத் துடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இதன்போது அவர் கூறுகையில்,
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பில் பிரதமர் பதில்களை வழங்கினார். ஆனால் இந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் இதனை செயற்படுத்தும் முறை தொடர்பில் உங்கள் கட்சியிலுள்ள 159 பேருக்கும் மற்றும் அதனை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் போதுமான தெளிவு இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
பலரும் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதனை செயற்படுத்தும் முறை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அத்துடன் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தையே மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் கோட்டாபய ராஜபக்ஸ வேறு முறையில் முன்னெடுத்தார். இராணுவத்தினரை பயன்படுத்தி கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவதாகவும், கொழும்பு நகரை அழகுப்படுத்துவதாகவும் நீங்களே அன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீங்களே இன்று கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் அதே வேலையை அவ்வாறே செய்கின்றீர்கள். அரசாங்கம் மாறும் போது அது இடைநிறுத்தப்படுகின்றது. இதற்கு நிலையான தீர்வு வேண்டும்.
இதேவேளை ஆட்டோ மற்றும் பஸ்களில் மேலதிக பாகங்களை அகற்றுகின்றீர்கள். பின்னர் சட்டத்தை காட்டி பணத்தை செலுத்தினால் பிரச்சினை முடிந்தது என்கிறீர்கள். அவ்வாறு பணத்தை கொடுத்தால் விபத்துக்கள் நடக்காதா? இதனால் குறைந்தது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயற்படுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் என்றார்.
இதன்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில்,
போக்குவரத்து அமைச்சர் நானே. பணம் கொடுத்தால் பிரச்சினை தீரும் என்று யார் கூறியது என்பதனை கூறுங்கள்? என்றார்.
இவ்வேளையில் மீண்டும் கூறிய நாமல் ராஜபக்ஸ, இதனை ஸ்ரீலங்கா பொலிஸாரே கூறினர். இதனை நான் கூறியதற்காக பொலிஸாருடன் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம். உங்களின் ஜனாதிபதி இராணுவத்தினர் கொலை செய்வதாக கூறுகின்றார். அவை தொடர்பில் பாதுகாப்பு சபையில் கதைக்கலாம். அவற்றை அரசியல் மேடைகளில் பேச வேண்டாம்.
இவ்வேளையில் எழுந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகையில்,
பொலிஸார் அவ்வாறு எதனையும் கூறவில்லை. தாஜுதீனை கொலை செய்தது யாரென நாட்டுக்கு தெரியும். தாஜுதீன் மற்றும் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி இங்கே கொலைகள் தொடர்பில் கதைக்கின்றார். நாமலுக்கு கொலைகள் தொடர்பில் கதைக்க எந்த அருகதைகளும் கிடையாது என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ,
நான் ஜனாதிபதி கூறியதையே கூறினேன். நீங்கள் இப்போது பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சராகவும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடி குழுவின் தலைவராகவும் இருந்தவர். அப்போது இவரே விசாரணை நடத்தினார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துங்கள். நான் எதிர்க்கட்சி எம்.பி. மக்களுக்காக கேள்வியெழுப்பும் அதிகாரம் உள்ளது. முதலில் நீங்கள் தூய்மையாகுங்கள். பின்னர் நாட்டை தூய்மைப்படுத்துங்கள். இது தொடர்பில் தெளிவுபடுத்துங்கள். உங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற கிளீன் ஸ்ரீலங்கா என்று எதிர்க்கட்சியை அச்சுறுத்தி பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்களும் அப்படி நினைத்தோம். ஆனால் அதனை செய்ய முடியாது என்பதனை நாங்கள் புரிந்துகொண்டோம். அந்த தவறை ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.