மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய (22) அமர்வின் முடிவில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
பாதுகாப்பு தரப்புக்கு சொந்தமான உடைமையை ராஜபக்சர்கள் வீணடித்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு தரப்புக்கு சொந்தமான விடுதியில் இவ்வளவு காலமும் முன்னாள் ஜனாதிபதி தங்கியுள்ளார்.
உங்களால் மாதமொன்றிற்கு, 4.5 மில்லியன் பணத்தை செலுத்த முடியும் என்றால் தாராளமாக தங்கியிருக்கலாம்.
அதற்கு தேசியமக்கள் சக்தி எந்த தடையையும் செயற்படுத்தாது. இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும்.
எதிர்க்கட்சி தரப்பினர் என்ன செய்கின்றார்கள். ராஜபக்சர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசிக்கின்றீர்கள். அது மாத்திரம் அல்லாது, இன்று கிளீன் சிறிலங்கா தொடர்பில் விமர்சிக்கின்றீர்கள்.
உங்கள் கொள்கை நிலையில்லாது உள்ளமை இதன் மூலம் வெளிப்படுகிறது.
எதிர் கட்சி உறுப்பினர்களே நீங்கள் யாருக்கு ஒத்துழைப்பை வழங்க உள்ளீர்கள். ராஜபக்சர்களுக்கா, ரணில் தரப்புக்கா, அல்லது மக்களுக்கா என்பதை விளக்க வேண்டும்.
கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சிங்கப்பூர் நாட்டின் பிரதி என கூறுகின்றீர்கள். ஆனால் அதனை வாசித்தவர்கள் எவரேனும் சபையில் உள்ளனரா? என கூறியுள்ளார்.