பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும், அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது.
பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தலிபானின் உயர்தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதாவும், பிரதம நீதிபதியும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிப்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் கரீம்ஹான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் யுவதிகளை குற்றவியல் அடிப்படையில் துன்புறுத்துவதற்கும் அத்துடன் தலிபானின் பாலின கருத்தியலுடன் ஒத்துப்போகவில்லை என கருதப்படும் நபர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் பெண்கள் யுவதிகளின் நண்பர்கள் என கருதப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் இந்த இருவருமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தலிபானிற்கு எதிரான எதிர்ப்பை,கொலை, சிறைத்தண்டனை,சித்திரவதை பாலியல் வன்முறை உட்பட ஏனைய பாலியல் கொடுமைகள் மூலம் அடக்குகின்றனர் என அவர்தெரிவித்துள்ளார்.
பிடியாணையை பிறப்பிப்பதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தற்போது தீர்மானிப்பார்கள்.