உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதான மேசைக்கு வருமாறு ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைக்கு ரஷ்யா முதல் முறையாக பதிலளித்துள்ளது.
இந்த நிலையில், சமாதான மேசைக்கு வருவதற்கு முன்பு அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக ட்ரம்ப் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவர ஒரு எளிதான வழியும் கடினமான வழியும் உள்ளது.
ஆனால் எளிதான வழிதான் சிறந்த வழி உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நேரம் இது, ரஷ்யா சமாதான மேசைக்கு வரவில்லை என்றால், அது விற்கும் அனைத்திற்கும் அதிக வரிகள் மற்றும் தடைகளை விதிக்கும் நிலையை ஏற்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்பின் குறித்த எக்ஸ் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில், சமாதான மேசைக்கு வருவதற்கு முன்பு ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமாக எதைப் பார்க்கிறார் என்பதை ரஷ்யா அறிய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் துணைத் தூதர் ட்மிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உக்ரைன் நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதாக மட்டுமே ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாகவும் ட்மிட்ரி பாலியன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுடன் சண்டையிட ரஷ்யாவிற்கு வந்த 11,000 வட கொரிய வீரர்களில் 3,000 பேர் காயமடைந்து மற்றும் உக்ரைன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 1,000 பேர் உக்ரைன் தரப்பால் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானதை தொடர்ந்து ரஷ்யாவின் இந்த பதில் வெளியாகியுள்ளது