திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை, க.ஜெகதாஸ், சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் உருப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் அரியநேத்திரன் மற்றும் அருட்தந்தை ஜெகதாஸ் ஆகியோரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து தலைவரினால் முதல் சுடர் ஏற்ப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இதன்போது அண்மையில் மரணமடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்த வேளை 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார். அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார்.
வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.