குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் நாமல் குமாரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான சமூக ஊடக பதிவு தொடர்பான விசாரணையிலேயே நாமல் குமார இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு தகவல் இயக்குநர் ஜெனரல் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரா தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான நாமல் குமார, தனது பெயரில் உள்ள முகநூல் கணக்குகளை தனது மனைவி மற்றும் தனது தாயின் பெயரில் உள்ள தொலைபேசி சிம் பயன்படுத்தி பராமரித்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள், சின்னங்கள் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு சர்ச்சை ஏற்படுத்தும் பிற தகவல்களைப் பரப்பியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.