அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் 76 வருட சாபத்தை தெரிவித்தே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த சாபம் இருந்த 76 வருடங்களும் தேங்காய் 100 ரூபாவாகும். ஆனால் தற்போது தேங்காய் விலை எத்தனை என கேட்கிறேன்.
சில இடங்களில் 250 ரூபாவுக்கே தேங்காய் விற்பனையாகிறது. எதிர்வரும் காலங்களில் 300 ரூபாவுக்கு செல்லும் நிலையே இருக்கிறது. அப்படியானால் இன்றைய நிலையை விட சாபம் இருந்த காலம் நல்லது.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் குரங்குகளும் இருந்தன. ரணிலும் இருந்தார். தேங்காயும் இருந்தது. அதே போன்று பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் 5 பேரும் இருந்தனர். ரணிலும் இருந்தார். நாட்டில் அரிசியும் இருந்தது. அதனால் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால்தான் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க அடிக்கடி தெரிவித்து வந்தார். அனுபவம் இல்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்திருந்தார். என்றாலும் மக்கள் அதனை கேட்கவில்லை.
தற்போது இந்த அநியாயங்களை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ் சிங்கள புத்தாண்டாகும்போது இது இன்னும் பாரிய பிரச்சினையாக மாறும். அரிசி இருந்தாலும் கடைகாரர்கள் அதனை விற்பனை செய்ய கொண்டுவருவதில்லை.
கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்தால், வியாபாரிகள் தண்டிக்கப்படுகின்றனர். கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள் இருந்து வருகின்றனர். சிங்கள புத்தாண்டு வரும்போது பச்சை அரிசி ஒரு கிலாே 400 ரூபா வரை செல்லும்.
அரசங்கத்துக்கு இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமல்போகும்போது 76 வருடங்கள் நாங்கள் ஆட்சி செய்ததன் சாபம் என எங்களை கூறிவருகிறது.
அரசாங்கம் நாட்டை எந்த திசைக்கு கொண்டு செல்கிறது என உண்மையில் எங்களுக்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அவர் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் வீட்டில் உட்கார்ந்து இருக்கவில்லை.
சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே வரிசைகளில் இருந்து மக்கள் வீடுகளுக்கு சென்றார்கள். அதனால்தான் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கிறது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அலரி மாளிகையில் நித்தரை கொண்டதில்லை.
அவர் கடமை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார்.அதேபோன்று ஜனாதிபதியாக இருந்த 2வருடங்களில் ஒரு நாள்கூட ஜனாதிபதி மாளிகையில் நித்திரை கொண்டதில்லை.
அதனால் அரசாங்கத்துக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்புவார்.
என்றாலும் தற்போதைய நிலைக்கு நாங்கள் காரணமில்லை. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்றார்.