தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்றையதினம்(26) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தக் கூட்டத்துக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்புக்கான அழைப்புக் கடிதம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரால் நேற்றுமுத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதற்குக் கால அவகாசம் கோரிய நிலையில் திகதி தீர்மானிக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.