இலங்கை அரசாங்கம் உட்பட உலக நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினுடைய முடிவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றத்துடன் அவர் எடுத்திருக்கும் முடிவுகளில் மிக முக்கியமானதாக இருப்பது உடனடியாக அனைத்து வெளிநாடுகளிற்கும் வழங்கப்படுகின்ற உதவிகளை நிறுத்தும்படி எடுத்த முடிவாகும்.
இதன் அடிப்படையில் இலங்கைக்கும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற உதவிகள் அனைத்துமே உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
1956 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு பல்வேறு சூழல்களில் பெருந்தொகையான பணத்தை பில்லியன் கணக்கில் வழங்கிவந்த அமெரிக்க அரசாங்கம், அதன் பின்பு பல ஜனாதிபதிகள் அமெரிக்காவில் புதிதாக வந்தபோதும் நிறுத்தப்படவில்லை. ஆனால் இப்பொழுது புதிதாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதையேற்றதுடன் அவர் அனைத்து உதவிகளையும் நிறுத்தும்படி அவரது தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் கொழும்பிலே இருக்கின்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள் அண்மையில் மட்டக்களப்பிற்கு வருகை தந்து, அவர்களால் உதவிகள் வழங்கப்பட்டு, நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இடைநடுவில் தீடீரென வெளியேறி, கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
அத்தோடு அவர்கள் அனைவரையும் உடனடியாக வாஷிங்கடனுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற இந்த உதவிகள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களின் சந்தையை அதிகரிப்பதற்கும், இலங்கையில் மனித உரிமைகள், இனங்களிற்கிடையே சமாதானத்தை கட்டியெழுப்புதல், பயிற்சிகள் கொடுத்தல், இளைஞர்களின் தொழில் தகைமைகளை விருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடையங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினூடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களினூடாகவும் மற்றும் சிவில் சமூகங்களினூடாகவும் இந்த செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இவை அனைத்துமே 90 நாட்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டங்கள் அனைத்தும் மீள பரிசீலனை செய்யப்பட்டு, புதிதாகவோ அல்லது பாதியில் விடப்பட்ட இடத்திலிருந்தோ இந்த திட்டங்கள் தொடர்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், மூன்று மாதங்கள் கடந்த பின்னரே அமெரிக்கா இலங்கைக்கு என்ன செய்யப்போகின்றது என்பதை பொறுத்துதான் அடுத்தகட்டமாக இலங்கையின் நகர்வுகள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சில சமயம் இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து இந்த உதவிகள் கிடைக்காத பட்சத்தில், இலங்கை சீனாவை நோக்கி நகரவேண்டிய தேவை ஏற்படும்.
ஏனெனில் வெளிநாட்டு உதவிகள் என்பது இலங்கைக்கு மிகவும் அவசியமானதென்ற பட்சத்தில் சில சமயம் சீனா, இலங்கைக்கு உதவி செய்கின்ற பிரதானமான நாடாக மாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.
அவ்வாறு மாறும் பட்சத்தில் இந்தியாவினுடனான உறவு எந்தளவிற்கு இருக்கும், இந்தியா இந்த உதவிகளை எவ்வாறு பார்க்கும், இந்தியாவினுடைய இராஜதந்திர செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே அமெரிக்காவினுடைய இந்த திடீர் முடிவுகள் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏனைய நாடுகள் உட்பட இலங்கையிலும் ஏற்படுத்தப்போகின்றது என்ற விடயம் மாத்திரம் நிதர்சனமாக உள்ளது.