பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்றுநேற்று (27) கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, ரஷ்யாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொருளாதார மீள் எழுச்சிச் செயற்பாட்டில் ரஷ்யா வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு பிரதயமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை, மற்றும் வர்த்தகத்துறையில் ரஷ்யாவின் வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு அதற்கான விசேட கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கையர்கள் ரஷ்ய படைகளில் இணைந்துள்ளமை தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதென இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக,சுயவிருப்பின் பேரில் ரஷ்ய படைகளில் இணைந்தவர்களின் கொடுப்பனவுகள் கிடைக்கவில்லையென செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், மற்றும் நட்ட ஈடுகள் சம்பந்தமான கோரிக்கைள் தொடர்பில் தூதுவரின் கவனத்துக்கு பிரதியமைச்சர் எடுத்துச் சென்றார்.
தொடர்ந்து வடக்கில் இருந்து முகர்வகள் மூலமாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகி ரஷ்யாவில் வைத்து வலிந்து படைகளில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது, ரஷ்யத் தூதுவர் விரைந்து குறித்த விடயம் சம்பந்தமாக இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும், அவர்களின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பில் கரிசனைகளை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக விசேட நடவடிக்கைகள் அடுத்து வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த நபர்களை மீட்டெடுப்பதில் அரசாங்கம் அதிக ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண்ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.