இந்நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு சென்றமை காரணமாக இலங்கை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட அதிருப்தி சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டது நிபந்தனைகளுடனா என்பது மற்றும் அதற்கான கரணங்கள் என்ன என்பது குறித்தும் அந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.
2001 ஆம் ஆண்டில் தாய்லாந்து அரசின் நன்கொடையாக இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற முத்துராஜா யானை அரச பட்டயம் ஒன்றின் மூலம் அளுத்கம கந்தே விகாரைக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என இதன்போது புலப்பட்டது
இந்த யானையை பராமரிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளினால் யானையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்தில் உள்ள அரச சார்பற்றநிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் அந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு வருமாறு அந்நாட்டு அரசாங்கத்திடமும், இந்நாட்டிலுள்ள தாய்லாந்து தூதுவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளன.
யானையின் முன் கால்களில் உள்ள காயங்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், தாய்லாந்தில் யானைக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இந்நாட்டை விட அதிகம் என்பதால், யானை குணமடைந்த பின்னர் மீண்டும் கந்தே விகாரைக்கு ஒப்படைக்கப்படும் என விகாரையின் தலைமை தேரருக்கு உறுதியளித்து, தாய்லாந்து அரசினால் சுமார் 220 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டு பிரத்தியேக விமானம் மூலம் யானை தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஆனால் முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என தாய்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியதால், இது இலங்கைக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது.
இதற்கு உண்மையிலேயே பொறுப்பான அரச நிறுவனம் எது என்பது குறித்து குழு வினவியது. யானையை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு விகாரைக்கு வழங்கியுள்ளதால் யானையின் பொறுப்பு மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் வனசீவரசிகள் திணைக்களத்திற்கு இல்லை என வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் தெரிவித்தார்.