பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(1) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எரிபொருள் விலை குறைக்கப்படும் என தங்களது தரப்பு எதிர்பார்த்திருந்த போதும் அது குறைக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. அந்த சலுகை மக்களை சென்றடைவதை நாம் உறுதி செய்வோம்.
இருப்பினும், 3 ரூபாய் நட்டத்திலேயே பேருந்து கட்டணம் அறவிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 331 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.