இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் அதிகரிக்கவுள்ள அதேவேளை, ஏனைய வாகனங்களின் விலைகள் குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடங்கள் பழமையான ஜீப் மற்றும் கார், 4 வருடங்கள் பழமையான வான்கள் மற்றும் 5 வருடங்கள் பழமையான பேருந்து மற்றும் லொறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சொகுசு வரி, இயந்திர செயற்றிறன் மீதான வரி, சுங்க வரி மற்றும் வட் வரி ஆகிய வரிகள் வாகனங்கள் மீது விதிக்கப்படும் என மானகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புதிய சுஸுகி வெகன் ஆர் கார் ஒன்றின் விலை 70 முதல் 72 இலட்சத்திற்குள்ளும் ஏனைய வெகன் ஆர் கார்களின் விலை 60 இலட்சம் முதல் 70 இலட்சத்திற்குள்ளும் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுஸுகி அல்டோ கார் ஒன்றின் விலை 35 இலட்சம் முதல் 50 இலட்சத்திற்குள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.