மட்டக்களப்பு மாநகர சபையினை குப்பைக்கூழங்கள் அற்ற தூய்மையான மாநகர சபையாகவும், இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், நாட்டினை தூய்மைப்படுத்தும் முகமாக ஆரம்பித்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாநகரசபை இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இலஞ்சம், ஊழல் என்பனவற்றினை தடுக்கும் வகையில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயனின் எண்ணக்கருவில் உருவான இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரும் கிரான் பிரதேச செயலாளருமான சட்டத்தரணி க.சித்திரவேல் கலந்துகொண்டார்.
இதன்போது நீங்கள் இலஞ்சம், ஊழல், தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள், சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது. இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்துவைக்கப்பட்டதுடன், ஆங்கில மொழிப் பதாகை நடப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகரசபையின் சேவைகளை அறிந்துகொள்ளவும், அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்ட இணையத்தளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அத்துடன் பொதுமக்கள் கழிவுகளை வீதிகளில் எரிவதை தடுக்கும் வகையிலும், அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தும் செயற்பாட்டுக்கு அமைவாக திருமலை வீதி சத்துருக்கொண்டானில் கேமரா பொருத்தப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.