தேசிய பயணப்போராட்டத்தின் முதல் களப்பலி திருமலை தந்த தியாகி தீரன் நடராசன் அன்று 22 வயதுஇளைஞன் தியாகி திருமலை நடராஜன் 68வது ஆண்டு நினைவு நாள்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவினால் 08.02.1956ல் சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தால் இலங்கையில் தமிழ் மொழி இரண்டாம்பட்ச மொழியாக்கப்பட்டது.
04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர்.
திருகோணமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும், தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன் என்ற 22 வயது இளைஞன் எவ்.ஜி.மனுவல் மற்றும் டீ. சில்வா என்ற சிப்பாயால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (1957) பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் ஒரு மைல் நீளத்திற்கு இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
தெருநெடுகிலும் பெண்கள் கூடி நின்று கண்ணீர் வடித்தனர். திரு. நடராஜனின் பிரேதப் பெட்டியை திருமலை நகரசபைத் தலைவர் திரு. த. ஏகாம்பரம், திருவாளர்கள் வி.ஏ. கந்தையா, எம்.பி.என்.ஆர்.இராஜவரோதயம் எம்.பி., எம். தாமோதரம்பிள்ளை, சட்டத்தரணி துரைநாயகம், கப்டன், ஏ.ஸி.கனகசிங்கம் ஆகியோர் கையேந்தித் தூக்கிச் சென்று ஊர்வலத்தை ஆரம்பித்துவைத்தனர்.
பிரேத ஊர்வல ஏற்பாடுகளை எல்லாம் திரு. எம். இராமநாதன் கவனித்துக்கொண்டார்.தொண்டர்கள் சுமார் 50 மலர் வளையங்களைத் தாங்கிச் சென்றனர்.
கந்தளாய் மயானத்தில் திருமலை நடராஜன் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடராஜன் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஞாபகார்த்த கட்டடத்தைக் கட்டி தமிழ் மொழியையும், கொடியையும் காக்க உயிர்நீத்த தியாகி நடராஜன் என்று பொறிக்க வேண்டும் என்று எல்லோராலும் அபிப்பிராயப்பட்டதனாலேயே நடராஜன் அவர்களது உடம் தகனம் செய்யப்படாமல் அடக்கம் செய்ய்பபட்டது என்று தெரியவருகிறது.
10.02.1957 இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் முதல் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 77 வது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக சொல்லிக்கொள்ளும் நிலையில் அன்னாரின் 68 வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.