பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி, வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
“அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றிவரும் ஒருவர், டின் – மீன் விற்பனை வியாபாரம் செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 29 இலச்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நடவடிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து வழங்கிய பணத்தை வர்த்தகரிடம் மீள தருமாறு கோரியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்திலுள்ள வங்கிக்கு சென்றுவந்த 21 வயதுடைய இளைஞனுக்கும் வங்கி முகாமையாருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் முகாமையாளர் தான் வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இளைஞன் தனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும். அவ்வாறே மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தெரியும். நான் அவருடன் பேசி பணத்தை வாங்கிதருகின்றேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு 3 வீதம் பணம் வழங்கவேண்டும் என தெரிவித்துளளதுடன், முகாமையாளரை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அழைத்து சென்று வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று வருவது போல பாசாங்கு செய்துள்ளார்.
இதன் பின்னர் முற்பணமக 30 ஆயிரம் ரூபாவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெற்றுக்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் எனவும் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
தான் குறித்த பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ள நிலையில் அவர் 20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயதப்பகுதிக்கு சென்று இளைஞனை அங்கு விட்டுவிட்டு அவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து சம்பவத்தை விளக்கியுள்ளார்.
இதன்பின்னர் “நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மிகுதி பணம் கொண்டுவந்துள்ளேன்” என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவங்களை கேட்டு அறிந்த அவர், அப்படி ஒருவரையும் தெரியாது. நான் புதிதாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர்.