விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன,விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது இந்த அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு நெல்லுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஸ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ளபோது அரசாங்கத்தின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-240.png)
நாங்கள் நெல் கொள்வனவுசெய்வதற்காக தேசிய ரீதியில் உள்ள சங்கங்களுடன் இணைந்து விலையொன்று நிர்ணயம் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஏக்கருக்கு 25மூடை என்ற வகையிலயே இந்த நெல் விலை மிகவும் குறைந்ததாக தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அவற்றினை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அதனைவிட குறைந்த விலையில் நெல்விலையை அறிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஸ்டத்தினை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்டுள்ளனர்.ஏக்கருக்கு சிலருக்கு நான்கு ஐந்து மூடைகளும் அறுடை கிடைத்துள்ளது.
ஆனால் அரசாங்கம் அவற்றினை கருத்தில்கொள்ளவில்லை.உரவிலைகளை குறைக்காமல் எண்ணையின் விலையினை குறைக்காமல் நெல் விலையினை மட்டும் குறைத்து கொள்வனவு செய்யமுனைகின்றது அரசாங்கம்.
இந்த அரசாங்கத்தினை நம்பியே நாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தோம். விவசாயிகளை கருத்தில்கொள்ளுங்கள். என்று குறிப்பிட்டார்