நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடையை நிறுத்தியதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-314.png)
அத்துடன், தனியார் அரிசி ஆலைகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
கடந்த (05) திகதி அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை அறிவித்திருந்தது.
இதற்கமைய, நாட்டு நெல்லை 120 ரூபாவிற்கும் சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல்லை 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.