மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதிக்கு நேற்று (09)மாலை வந்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களினால் விரடப்பட்டன.
மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.
தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்று நிறைவுறும் தறுவாயில், யானைகளின் வருகையானது காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/475003866_2021975021640517_7832200436101605971_n-1024x576.jpg)
நேற்று மாலை யானைகள் கொக்கட்டிச்சோலை நோக்கிவருவதை அவதானித்த மக்கள் அது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்த முனைந்தபோதும் மின்தடை காரணமாக தொடர்புகொள்ளமுடியாத நிலையில், மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் நிலைமையினை அங்குள்ள உத்தியோகத்தர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும் அந்தநேரத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய வாகனத்தினை செலுத்துவதற்கு சாரதிகள் இல்லாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் இரு உத்தியோகத்தர்கள் அழைத்துச்செல்லப்பட்டு கொக்கட்டிச்சோலைப்பகுதிக்குள் வந்த யானைகள் துரத்தப்பட்டன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/476721997_2021974688307217_1763505798616691441_n-1024x768.jpg)
குறித்த யானைகள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளதாகவும், யானைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கையெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டாரவினை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், அலுவலர்களின் தேவை, ஆளணித் தேவை, வாகனத் தேவை சாரதிகளின் தேவை தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/475580170_2021975314973821_1818360026626581290_n-1024x621.jpg)