கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டமாகும்.இதனை முறையாக பயன்படுத்தி சுத்தமான பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழுவின் பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்துடன் உடன்பட்டுச்செல்வதற்கான காரணம் இந்த கிளீன் சிறிலங்காவும் ஒன்று,சுத்தமான நாடு,சுத்தமான பிரதேசசபையினை உருவாக்கும் திட்டமாகவுள்ளதனால் அதற்கான ஒத்துழைப்பினை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழுக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-10-at-16.35.57-1024x768.jpeg)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழுவின் பேச்சாளருமான ஞா.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,மீன்பிடி மற்றும் கிராம மட்ட அமைப்புகள்,உள்ளுராட்சிமன்றங்களின் செயலாளர்கள் என பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-10-at-16.35.571-1024x768.jpeg)
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் வெள்ள அனர்த்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அதன் ஊடாக பிரதேச செயலகப்பிரிவில் சட்ட விரோத மதுவிற்பனை, சட்ட விரோத போதைப்பொருள் பாவனையை தடுத்தல், ஊழல்களை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டியn சயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-10-at-16.35.56-1024x768.jpeg)