வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேற்றை வாரி இரைப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதையும் எமது அரசியல் எதிர் தரப்புக்கள் கையாள்வது வழக்கம்.
அவ்வாறு தற்போதும், சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புலிகளின் தலைமையும் எமது செயலாளர் நாயகமும், எமது மக்களின சுதந்திரமான – கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இரு வேறு ஆயுதப் போராட்ட அமைப்புக்களை வழிநடத்தியவர்கள்.

எங்களுடைய கைகளிலே ஐந்து விரல்கள் காணப்படுகின்போதிலும் அவை வித்தியாசமான செயற்பாடுகளை கொண்டவையாக காணப்படுகின்றன.
அதே போன்றுதான், எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட பிரதான ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்களும் வித்தியாசமான செயற்றிறன்களையும், வேறுவேறான சிந்தனைகளையும் கொண்டிருந்தனர்.
அந்தவகையில் எமது செயலாளர் நாயகத்திற்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் தமது இலக்கினை அடைவது தொடர்பில் வித்தியாசமான சிந்தனைகள், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் காணப்பட்டன.
எத்தகைய அழிவுகளை கொடுத்தேனும் இலக்கை அடையும் வரையில் ஆயுதப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க வேண்டும் என்பது புலிகளின் தலைமையின் சிந்தனை.
விவேகம் அற்ற வீரம் விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சர்வதேச பூகோள நிலவரங்களை அனுசரிக்க வேண்டும்.

இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும், சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும், உருவாகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனை.
ஆனால் இருவருக்கும் இடையில் பொதுவான குணாம்சங்களும் காணப்பட்டன. அதாவது, தாங்கள் ஒரு விடயத்தினை தீர்மானித்து விட்டால் அதில் உறுதியாக இருந்து அதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவது.
மற்றது, யாருடைய மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு அடிபணியாத பிடிவாதம். நான் நம்புகின்றேன். இவ்வாறான இருவருக்கும் பொதுவான குணாசமங்கள்தான், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை வலுப்படுத்தின.
இவர்களுக்கிடையிலானபிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எம்மத்தியில் காலத்திற்கு காலம் இருந்த சமூக சிந்தனையாளர்கள் புத்திஜீவிகள் என்று பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

தன்னுடைய பயணத்திற்கு எதிரான தடைகளும், மாற்றான சிந்தனைகளும் அழிக்கப்பட வேண்டியவை என்ற தன்னுடைய சிந்தாந்தத்திற்கு அமைய புலிகளின் தலைமை எமது செயலாளர் நாயகத்தை அழிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது.
அவற்றை தன்னுடைய தற்துணிவினாலும் எமது தோழர்களின் அர்ப்பணிப்பாலும் எமது செயலாளர் நாயகம் முறியடித்தார். இந்த நிலை பல வருடங்களாக நீடித்த நிலையில் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் திரட்சியடைந்து வீரியமடைந்தது.
இப்போதும் 2009 இற்கு முற்பட்ட சூழல் இருக்குமாயின் இருவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது இன்னும் தீவிரமடைந்திருக்கும். இந்த முரண்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்காக பொங்கி எழுந்த இரண்டு தலைவர்களின் சிந்தனை வேறுபாடுகளினாலும் செயற்பாடுகளினாலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறான பின்னணயில்தான், எமது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கருத்தாடல்கள் உருவாகின்ற சந்தர்ப்பங்களில் எமது செயலாளர் நாயகம் புலிகளின் தலைமையை கடுமையாக விமர்சிக்கின்றார்.
இந்த நிலையில் எமது மக்கள் ஒரு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுக்காக உருவாகிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் களத்தில் இருந்து அகற்றி தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலத்தை பலவந்தமாக தமது கையில் எடுத்த புலிகளின் தலைமை, அதனை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற ஆதங்கம் எமது செயலாளர் நாயகத்தின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்கள் சந்தித்த அனைத்து இழப்புக்களுக்கும் புலிகளின் தலைமையின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பது எமது செயலாளர் நாயகத்தின் திடமான வாதமாக இருக்கின்றது.
அதைவிட, எங்களுடைய செயலாளர் நாயகமும் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில், தன்னுடைய வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டார்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னுடைய சக தோழர்களான பல ஆளுமைகளை கொலை செய்யப்பட்டமை எமது செயலாளர் நாயகத்தின் ஆழ் மனதில் ஆறாத வடுவாக இருந்து கொண்டே இருக்கின்றது.
அவை எல்லாவற்றையும்விட முக்கியமானது 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் அவர் எதிர்நோக்கிய நடைமுறை சிக்கல்கள். அதாவது, நூற்றாண்டுகளாக எமது மக்கள் வழிபட்டு வந்த வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடு நடத்த அனுமதியுங்கள் என்றால், சுற்று நிரூபங்கள் என்றும் சட்டதிட்டங்கள் சாக்கு போக்கு சொல்கிறார்கள்
பல்வேறு திணைக்களங்களும் கூகுளில் பார்த்துவிட்டு கையகப்படுத்தி வைத்துள்ள எமது மக்களின் காணிளை விடுக்க முயலும்போது அவர்கள் சொல்லுகின்ற ஆயிரம் வியாக்கியானங்களும் கால இழுத்தடிப்புக்களும் அவரை சினம் கொள்ள வைக்கின்றன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் காலத்தின் தேவையுணர்ந்து ஈடு இணையற்ற தியாகங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலம் சரியான முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பின், இவ்வாறு ஒவ்வொருவும் கதை சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? என்று செயலாளர் நாயகத்தின் உள்ளுணர்வு குமுறுகின்றது.
அந்தக் குமுறல் புலிளின் தலைமைக்கு எதிரான விமர்சனமாக அவ்வப்போது வெளிப்படுகின்றது. இதுதான் உண்மை. ஆக எமது செயலாளர் நாயகம் வெளிப்படுத்தும் புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அறச் சீற்றத்தினை வெளிப்படுத்துகின்ற போது, புலிகளின் அமைப்பின் தியாகங்களை வைத்து போலி அரசியல் செய்கின்றவர்களினால் காண்பிக்கப்படுகின்ற பிம்பங்களையும் கற்பனைகளையும் விமர்சிக்கின்றார்.
ஆயுதப் போராட்டம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. எங்கெங்கு தவறுகள் இடம்பெற்றன. எவ்வாறு தவறுகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்துகின்றார்.
எனவே எமது செயலாளர் நாயகத்தின் அறச் சீற்றமும், அரசியலுக்காக எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலாற்று உண்மைகளுமே எமது அரசியல் எதிரிகளால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை என்றார்.