இலங்கை அரசாங்கம் சமஷ்டி முறையிலான கெளரவமான அரசியல் தீர்வு வடக்கு,கிழக்கு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அது சார்ந்த மக்களும் மக்கள் பிரகடனம் என்ற புத்தகத்தின் மூலம் 16 விடயங்கள் உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இன்று (31.07.2023) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போதே மேற்காண்டவாறு தெரிவித்திருந்தனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் வடக்கு,கிழக்கில் 8 மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று 31 உடன் ஒருவருடம் பூர்த்தியாகிறது ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வை தட்டிக்கழித்தபடியே செல்கிறது.
இந்நாட்டின் ஜனாதிபதி கூட 13ம் அரசியல் திருத்தத்தினூடாக காணி அதிகாரங்கள்,பொலிஸ் அதிகாரங்கள் வடகிழக்கிற்கு வழங்குவதற்கு கட்சிகளுடன் பேசுகிறேன் என்று கூறுகிறார் ஆனால் அவரின் செயற்பாடு வினைத்திறன் மிக்கவையாக இல்லை என்ன தெரிவித்திருந்தனர்.
இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருகிறது. இது இனங்களுக்கிடையே எதிர்காலத்தில் இனமுருகளை ஏற்படுத்தலாம். அதனால் மக்கள் பிரகடனம் இந்த 16 விடயங்கள் உள்ளடக்கிய முறையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அதே சமயம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் மேற்குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உள்ளடக்கப்பட்ட 16 விடயங்கள்
1.வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.
2.ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.
3.ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
04.முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் சபையின் தலைமை உறுப்பினராக திகழ்வார்.
05.ஆளுநர் என்பவர் மாகாணத்தின் மக்கள் பிரதிநிகள் சபையைக் கட்டுப்படுத்தாதவராகவும் மத்திய அரசின் கௌரவ பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.
6.வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
7.மாகாண மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திசார் சர்வதேச ஒப்பந்தங்களை மாகாண ஆட்சி மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் சர்வதேச வணிகம், தொழில்துறை அபிவிருத்தி, நகரமயமாக்கல் அடங்கலான கட்டுமான அபிவிருத்தி ஆகியன அடங்கல் வேண்டும்.
8.காணி மற்றும் மாகாண ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஏனைய அனைத்து விவகாரங்கள் சார்ந்தும் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.
9.மாகாண அலகிற்கான பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
- நீதித்துறை, அரச நிர்வாகம், கல்வி, பொதுச் சுகாதாரம், பொதுப்போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின்சாரம், எரிபொருள் அடங்கலான ஏனைய அனைத்து துறைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு மாகாண ஆட்சிக்குள்ள அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பிற்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
- தற்போதைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் கரையோரப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மிதக்கும் கடற்படைத்தளங்களை தேவையான கடற்பிரதேசங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் காணிகள் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்படுவதுடன் இயல்பு வாழ்வை மீளப்பெற முடியும்.
- இலங்கையின் மத்திய அரசானது, வடக்கு கிழக்கு மாகாண அலகு பொருளாதாரப் பலம் அடைவதற்காக குறிப்பிட்ட காலம்வரையில் தேவையான நிதிசார் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
- தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் சார்ந்து பொறுப்புக் கூறும் கடப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது. எனவே சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐ.நா.வின் வழிகாட்டலில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
15.வடக்கு கிழக்கு மாகாண அலகானது மாகாணத்துக்குள் வாழும் அனைத்து இன-மத மக்கள் மத்தியிலும் சக வாழ்வு, இன மத நல்லிணக்கம்,ஒருமைப்பாடு ,சகோதரத்துவம் ஆகிய நிலைபேறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
16.மத்திய அரசானது, இலங்கை நாட்டின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக வாழ்வு, இன நல்லிணக்கம், சகவாழ்வு, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய மனிதப் பண்புகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நம் அயலிலுள்ள நட்பு நாடான இந்தியாவையும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மன் அடங்கலான மையக்குழு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா.சபையையும் கோருகிறோம்.