13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. இது தேவையற்ற ஒன்றாகும். அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இந்தியாவின் தலையீட்டைக் கோரிதமிழ் கட்சிகள் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பேசுபொருளானது.
13ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் வலியுறுத்த முடியாது. அதனுடன் சமஷ்டியையும் சேர்த்துக் கூறவேண்டுமென்று சம்பந்தனும் சுமந்திரனும் வாதிட்டனர். இந்த முறை கடிதம் அனுப்பும் விடயத்திலும் மீண்டும் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துகளை முன்வைத்து மீண்டும் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் இலக்கை பூர்த்திசெய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவது இரகசியமானதல்ல. இந்த நிலையில் அவர் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில் தனக்கு ஆடசேபனையில்லை – அது 13ஆவதாகவும் இருக்கலாம் அதனை தாண்டியதாகவும் இருக்கலாம் – ஆனால், அனைவரும் அதற்கு உடன்பட வேண்டுமென்று ஒரு கதையை கூறிவருகின்றார்.இதற்குள் தமிழ் கட்சிகள் தங்களின் மூக்கை நுழைத்து தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அரசமைப்பிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்மையிலேயே அக்கறையிருந்தால் அதனை முன்னெடுப்பதற்கு எவருடைய ஆதரவும் தேவையில்லை. ஒரு நிறைவேற்று ஜனாதிபதி என்னும் வகையில் அவருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை அவர் முன்னெடுக்கலாம். இதற்கு தமிழ் கட்சிகளின் ஆதரவும் அவசியமற்றது. இதன் மூலம், அவருக்கு தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையிருக்கின்றது என்பதை தமிழ் மக்களும் புரிந்துகொள்வார்கள். அவ்வாறில்லாது, அனைவரும் உடன்பட வேண்டும். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியாக வரவேண்டுமென்று கதைகளைக் கூற வேண்டியதில்லை.
ஏற்கனவே, பிரேமதாஸவால் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதனை பின்னர் பேசலாமென்று ரணில் கூறினால் அதனை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதில்கூட தமிழ் கட்சிகள் தங்களுக்குள் விவாதிக்க வேண்டியதில்லை. முதலில் உங்களால் செய்யக்கூடியதை செய்யுங்கள் – பின்னர் ஏனைய விடயங்களை பேசுவோம் என்னும் அடிப்படையில் தமிழ் கட்சிகள் தங்களின் வாய்களுக்கு பூட்டுப்போட்டுக்கொள்ள
வேண்டும். நாவடக்கம் தமிழ்த் தேசிய கட்சிகள் என்போருக்கு மிகவும் அவசியமானது.
ரணில் ஒரு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் செயல்படுகின்றார் என்பது தெரிந்த பின்னர், அவரின் கருத்துகளை முன்வைத்து விவாதிப்பதானது அரசியல் முதிர்ச்சியற்ற செயலாகும். தமிழ் கட்சிகளின்
தலைவர்கள் என்போர் அரசியல் முதிர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும்.