மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி புனரமைப்பு காரணமாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பித்து வைக்குமாறு அக்கிராம மக்கள் முன்வைத்து வந்த பலதரப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நேற்று (15) சனிக்கிழமை மீண்டும் பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மண்முனைபற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின் போது குறித்த விடயம் அதிகமான கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையிலேயே, ஆரையம்பதி, காங்கேயனோடை, ஒல்லிக்குளம் ஆகிய கிராம மக்களின் நலன் கருதி கிராம மக்களின் நலன் கருதி இவ் பேரூந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பேருந்து போக்குவரத்து நிலைய முகாமையாளர் ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காங்கேயனோடை கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த பேருந்து சேவையானது தினமும் அம்பலாந்துறையில் இருந்து மண்முனை பாலம் வழியாக பயணித்து வருகை தந்து ஒல்லிக்குளம், காங்கேயனோடை, ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.