தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (16) நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் திருத்தம் வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாக இந்த அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாடுபூராகவும் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.

வடக்கிலும் தமிழ் மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால் அண்மைக் காலமாக அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் குறிப்பாக அரச பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தற்போது பொருளாதாரப் பிரச்சனை தான் முக்கியமானது அதனைத் தான் நாங்கள் கவனிப்போம். அரசியலமைப்பு பற்றி பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று கூறியிருக்கின்றார். வேறு சிலர் மூன்று வருடங்களின் பின்பே அரசியலமைப்பு பற்றி பேசலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இந்த நாட்டின் பிரதான பிரச்சினை தமிழ்த் தேசியப் பிரச்சனை. வேறு எந்தப் பிரச்சனை சம்மந்தமாகவும் இந்த நாட்டிலே முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெறவில்லை. பொருளாதாரப் பிரச்சனைக்கு அடிகோலியாக இருப்பதும் இந்தத் தமிழ்த் தேசியப் பிரச்சனையே. எனவே இதனை நாங்கள் விட்டுவிட்டு பொருளாதாரப் பிரச்சனையை அவர்கள் முதலில் கவனிப்போம் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே நாங்கள் அரசாங்கத்திடம வலிந்து கோருவது நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். உங்களிடத்தில் அரசியற் தீர்வு இருக்கின்றதென்று சொல்லுகின்றீர்கள். அதனை காலம் தாழ்த்தாது நீங்கள் முன்வையுங்கள்.
தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும். காலாகாலமாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அரசியற் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி வந்துள்ளது. எனவே இதில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை புதிதாக முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனைத் தீர்ப்பதற்கு எங்களுக்கு தெரியும் என்றசொல்லுகின்ற அரசாங்கம் காலம் தாழ்த்தாது உங்களிடம் இருக்கும் வரைபை முன்வைக்க வேண்டும் என்பதே எங்களது அழுத்தமான வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
