ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும், அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அகிலன் தலைமையில் பெரியகல்லாறு கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் ( 16 ) நடைபெற்றது.

இதன் போது கழக ரீதியில் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கடந்த வருடம்( 2024 )தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோன்றி பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து மடல்களும், பாராட்டு பத்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் , நாட்டிய நிகழ்வுகளும் விழாவை அலங்கரித்தன.

மேலும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கௌரவிக்கப்பட்டதோடு , பாராட்டு பத்திரங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.இதன் போது கழகத்தின் உறுப்பினர் ,மூத்த உறுப்பினர்கள், ஆலய குருமார், கிராம ஆலயங்களின் பிரதிநிதிகள், அதிபர்கள் , ஆசிரியர்கள் , கிராம மக்கள் , மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் பொது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் “NPP அரசாங்கம் ஒரு “L” போர்ட் அரசாங்கம், திருடர்களின் பெயர் பட்டியலை வெளிவிடுகின்றனர் திருடிய பணத்தை பிடிக்காமல் மக்களை ஏமாத்து கின்றார்கள் என்றும் அங்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.