இலங்கையில் ஒரு புதிய கூட்டுத்தாபனமாக நிறுவப்படும் ‘மெட்ரோ பேருந்து நிறுவனத்தின்’ கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கான முதல் படி இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு நகர நுழைவாயிலுக்குள் அடையாளம் காணப்பட்ட மூன்று பிரதான சாலை வழித்தடங்களில் 100 சொகுசு பேருந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும்.
அடையாளம் காணப்பட்ட மூன்று பாதைகள் கொட்டாவ – புறக்கோட்டை, கடவத்த – புறக்கோட்டை மற்றும் மொரட்டுவ – புறக்கோட்டை என்பனவாகும்.
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட பேருந்துகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தனித்தனி பேருந்து அட்டவணைகளுக்குப் பதிலாக, அனைத்து வழித்தடங்களிலும், குறிப்பாக நீண்ட தூர பேருந்து சேவைகளில், ஒருங்கிணைந்த பேருந்து அட்டவணையை செயல்படுத்தும் திட்டத்தையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.