காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் சில மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
