நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (19) தெரிவித்துள்ளார்.
பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்ட நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகள் மூலமும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, திட்டமிட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய துப்பாக்கிச் சூட்டில் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு குறைபாட்டை சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை இனி சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் ஒத்துழைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடமும் கோரப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்திய அதிகாரிகளை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்படும் என்றும் அவர் கூறினார்.