மன்னார் மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர் பறவைகள் வருகை தருவது வழமை.
மன்னார் மாவட்டமானது புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் நாடுகளுக்கு செல்கின்றன.

இவ்வாறான நிலையில் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டு பறவைகளின் வரவு மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சதுப்பு நிலங்களை அண்டிய பகுதிகளில் உள்ளூர் பறவைகளுடன் இணைந்து உணவு உண்ணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் முன்னைய ஆண்டுகளில் அதிகளவான பறவைகள் வருகை தந்த நிலையில் இம்முறை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் தற்போது குறித்த பறவைகளைப் பார்வையிட மன்னார் பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
