சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த பேரீச்சம்பழங்கள், மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதனடிப்படையில், எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் பேரீச்சம்பழங்கள் அதிகமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த நனகொடைத் திட்டமானது உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்திற்கான சவூதி அரேபியாவின் ஆதரவையும் உதவியையும் வலுப்படுத்துகிறது.
இந்த விநியோகத்தை, சவூதி தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இஸ்லாமிய அலுவல்கள், பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.
பொருத்தமான நேரத்தில் மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு பேரீச்சம்பழங்கள் அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை, ரமழான் காலத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு உதவுவதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதியில் இருந்து, இலங்கைக்கும் சமீபத்தில் 50 தொன் உயர்ரக சவூதி பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது, இரு நாடுகளுக்கிடையேயான உறவினை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முஸ்லிம் சமுதாயத்திற்கு சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் சான்றாகக் அமைகிறது என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் அல்-ஷேக், உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு உதவுவதில் சவூதி தலைமைகள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விழுமியங்களை பரப்புவதை, சமாதானத்தை ஊக்குவிப்பதை மற்றும் தீவிரவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் எதிர்க்க உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.