கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையில் எம்மால் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எமது பிள்ளைகளை இதுவரையில் ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா என எண்ணி காத்திருந்து 8 வருடங்கள் நிறைவடைந்து ஒன்பதாவது வருடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் எவராலும் எமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

ஆட்சி பீடம் ஏறும் ஜனாதிபதிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற போது எமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் வழங்கப்படும் என வாக்குறுதிகளை மாத்திரமே அள்ளி வழங்கி வருகின்றனர். எமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
எமது பிள்ளைகளை உறவுகளை தேடி பல தாய் தந்தையர் உறவுகளும் இறந்து போய் உள்ளனர். எமக்கான தீர்வினை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், எட்டாவது வருடத்தை நிறைவு செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வடக்கு – கிழக்கு இணைந்த அனைத்து உறவுகளும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு மீனாட்சி அம்மன் ஆலய வரைதீச்சட்டியினை ஏந்தியவாறு சென்றடைந்துள்ளனர்.
