கடந்த மே மாதம் முதல் வாரத்தில் மணிப்பூரில் வன்முறை மற்றும் கலவரங்கள் தொடங்கின. இந்த வன்முறைகளைச் சிலர் குகி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்று நம்புகிறார்கள்.
சிலரின் கருத்துப்படி இது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதல். மேலும், இது மலைவாழ் மக்களுக்கும் நாடோடிகளுக்கும் இடையே நடக்கும் மோதல், பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோருக்கு இடையேயான மோதல், சட்டவிரோதமாக குடியேறியவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையேயான மோதல் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் உலவுகின்றன.
இந்த குழப்பங்களுக்கு இடையே, பெனே மினாஷே சமூகமும் இந்த வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தவரும் ‘குகி’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். ஆனால் அவர்களது வேர்கள் இஸ்ரேலில் உள்ளன.
அவர்கள் வடகிழக்கு இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குடியேறினர்.
யூதர்கள் என்று தங்கள் அடையாளத்தை நிறுவிய பின், ஆயிரக்கணக்கான பெனே மினாஷே மக்கள் குடிபெயர்ந்து இங்கு வந்து உள்ளூர் மக்களுடன் கலந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இஸ்ரேலுக்கு மீண்டும் குடிபெயரலாம் என்ற நம்பிக்கையில் வடகிழக்கு இந்தியாவில் தங்கி வசிக்கத் தொடங்கினர். ஒரு நாள் அவர்கள் தாயகம் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுடைய அப்போஸ்தலர்களின் செய்தி அவர்களுக்கு அளித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் யூத மக்களை திரும்ப அழைத்து வர இஸ்ரேல் முயற்சித்தது. இதற்காக அவர்களின் உளவு நிறுவனமான மொசாட் பல நிலைகளிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் உளவு நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள யூதர்களை திருப்பி இஸ்ரேலுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் பாலாறும், தேனாறும் ஓடும் நாடு என்று அழைக்கப்படுகிறது.
ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரின் போது, ஏராளமான யூதர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர்.
1984 இல், எத்தியோப்பியாவில் பல யூதர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.
அப்போது இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ ஒரு நடவடிக்கையைத் திட்டமிட்டிருந்தது. அதற்கு ஆபரேஷன் மோசஸ் என்று பெயரிடப்பட்டது. முதலில் அவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் பிற வழிகளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மொசாத் அப்போதைய எத்தியோப்பிய நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியின் நிர்வாகிகள் யூதர்களுடன் விமானத்தில் பறந்து, ஆயுதங்கள் மற்றும பாதுகாப்பு மிக்க நிலத்தில் இறங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நடவடிக்கைகள் ஆறு மாதங்கள் நீடித்தன. இதற்கிடையே, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விஷயத்தை பொதுவெளியில் அறிவித்து ஒரு மாபெரும் தவறைச் செய்தார். இதனால் மொசாத்தின் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அண்டை நாடான சூடானுக்குத் தப்பி வந்த ஒரு யூத ஆசிரியர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள பல யூத மற்றும் மனித உரிமை அமைப்புகள், அரசு நிறுவனங்களுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார், அதில் ஒன்று மொசாத்தை அடைந்தது. இந்த ஆசிரியரின் உதவியால், எத்தியோப்பியாவில் வாழும் யூதர்கள் சூடான் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை பெற்றனர்.
எத்தியோப்பியாவில் சிதறிக் கிடந்தாலும், தங்கள் சொந்த ஊர்களை மறக்காததால், யூதர்கள் கால் நடையாக சுமார் 800 கிலோமீட்டர் பயணத்தைத் தொடங்கினர். பட்டினி, கொள்ளை, தண்ணீர் பற்றாக்குறை, உயிர்க்கொல்லி நோயால் பலர் வழியிலேயே இறந்தனர்.
இந்த கறுப்பின யூதர்கள் சூடானில் உள்ள உதவி முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல் எல்லையே இல்லாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. அங்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கப்பட்டனர்.
மொசாத் ஒரு சூடான் கடற்கரையை சுற்றுலாவுக்குத் தேவைப்படுவதைப் போல் காட்டி, பொய்யான பெயரில் குத்தகைக்கு எடுத்து அதை ரிசார்ட்டாக மாற்றி நூற்றுக்கணக்கான யூதர்களை கடல் வழியாக சூடானில் இருந்து வெளியேற்றியது. இதற்காக சூடான் நாட்டு இரகசியப் போலீஸாரும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தனர்.
இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் மைக்கேல் பார்-சோஹர் தனது ‘மொசாத்’ புத்தகத்தின் 21வது அத்தியாயத்தில் இதைக் குறிப்பிடுகிறார். அப்போதும் கூட, இந்த நடைமுறைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்தன என்பதுடன் ஒரு சிறிய எண்ணிக்கையிலான யூதர்கள் அங்கு வாழ முடிந்தது.
கிமு எட்டாம் நூற்றாண்டில், அசீரிய படையெடுப்பின் போது இஸ்ரேலின் வடக்குப் பகுதி வீழ்ந்தது. இஸ்ரேலிய சமூகத்தின் வாய்வழி வரலாற்றின் படி, இந்தச் சமூகம் பெர்சியா (இன்றைய ஈரான்), ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் சீனா வழியாக வடகிழக்கு இந்தியாவை அடைந்தது. இந்த பாதை அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய பட்டுப் பாதையுடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. அவர்கள் முக்கியமாக மிசோரம் மற்றும் மணிப்பூர், இன்றைய பங்களாதேஷ், மற்றும் மியான்மர் ஆகிய மூன்று பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக அவர்கள் வடகிழக்கு இந்தியாவில் ஒரு தனி வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களின் முன்னோர்களால் வழங்கப்பட்ட சில பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர்.
பிரதான சமூகத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக வாழும் அவர்கள் மீது, வடகிழக்கு இந்தியாவின் ஆட்சியாளர்கள் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், அவர்கள் தங்கள் சொந்த மதத்தை அப்படியே பின்பற்றி வந்துள்ளனர்.
டேவிட் சின்னத்தின் ஆறு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமும் அவர்களது நடைமுறை மற்றும் அவர்களின் மதத்துடன் தொடர்புடையதாகவே இருந்துவருகிறது.
ஒரு நாள் அவர்கள் அனைவரும் ‘அவர்களின் சொந்த தேசத்திற்கு செல்ல முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக இந்த தகவல் ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டுவரப்பட்டு வருகிறது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயர் ஆட்சியின் காலடி இந்தியாவில் வலுப்பெற்றது. அப்போது நாடு முழுவதும் கிறிஸ்தவம் பரவியதுடன், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் பாதிரியார்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு மிஷனரி பயணங்களை மேற்கொண்டனர்.
அவர்கள் வடகிழக்கு இந்தியாவின் பழங்குடியினப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்தனர். அங்கே மினாஷேயின் சந்ததியினரிடமும் அவர்கள் பேசினர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப முடியும் என்று அவர்கள் கூறினர். ஆனால், அப்போது இஸ்ரேல் என்ற நாடு உருவாகவே இல்லை.
1970 களில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டபோது, கிறிஸ்தவ மற்றும் யூத நடைமுறைகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டனர். மினாஷே சமூகத்தைச் சேர்ந்த ஜைடான்சுங்கி என்பவர், இழந்த சாதிகளைக் குறிப்பிட்டு பல மாநாடுகளில் இந்த விஷயத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தார்.
இந்தச் சமூகத்தினர் கூறுவது உண்மையா எனக்கண்டுபிடிக்க, இஸ்ரேலிலிருந்து பிரதிநிதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் யூதர்களின் வாழ்க்கையுடன் ஒத்துப் போகும் அளவுக்கு நிறைய ஒற்றுமைகள் காணப்பட்டன.
தொடர்ந்து நடந்த டிஎன்ஏ சோதனையில், இந்தசமூகத்தில் உள்ள மக்களுக்கும், மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் ஒத்துப்போகும் வகையிலான டிஎன்ஏ இருப்பது தெரியவந்தது. இதற்குப் பிறகு, இஸ்ரேலில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டன.
மார்ச்-2005 இல், இஸ்ரேலின் தலைமை மதகுரு, இந்த சமூகத்தினரை மினாஷேயின் வழித்தோன்றல் என்றும் வடகிழக்கு இந்தியாவில் வாழும் யூதர்கள் என்றும் அங்கீகரித்தார். அவர்கள் அலியா நடைமுறையின் கீழ் இஸ்ரேலில் நிரந்தரமாக குடியேற முடியும். யூதரான அவர்களுக்கு அங்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் தேவையில்லை.
யூத மதத்திற்கு மாறிய பிறகு, அவர்கள் படிப்படியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் ஹீப்ரு மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், மத நடைமுறைகள் மற்றும் ஆண் என்றால் விருத்தசேதனம் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னர் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஏறக்குறைய பல யுகங்களுக்குப் பின், ஆயிரக்கணக்கான மினேஷாக்கள் இஸ்ரேலில் வாழ்கின்றனர் என்பதுடன், இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், கல்வி மற்றும் பிற துறைகளில் பங்களிக்கின்றனர்.
பாலஸ்தீனத்துடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக இவ்வாறான பல இடங்களில் இருந்து யூத மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக சில இஸ்ரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம் ஆயிரக்கணக்கான யூதர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் மசாலா வர்த்தகத்தின் மூலம் மலபார் கடற்கரையை அடைந்து அங்கு குடியேறினர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஆயிரக்கணக்கான யூதர்கள் வணிகத்திற்காக தலைநகர் கல்கத்தா மற்றும் நிதித் தலைநகர் மும்பைக்கு வந்தனர்.
1945 மற்றும் 1950 க்கு இடையில், இந்தியாவில் வாழும் யூதர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் மூன்று முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் நடந்தன. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டனர். எனவே, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகு, உலகம் முழுவதும் வாழும் யூதர்கள் தங்கள் தாயகத்திற்காக ஏங்கத் தொடங்கினர்.
முதல் உலகப் போருக்குப் பிறகுதான் இன்றைய பாலஸ்தீனத்தைச் சுற்றி யூதர்கள் ஒன்று கூடி காலனிகளை நிறுவத் தொடங்கினர். அரேபியர்களுடனான அவர்களின் மோதல் தொடங்கியது. இஸ்ரேல் இறுதியாக 1948 இல் உலக வரைபடத்தில் தோன்றியது. ஐரோப்பா மற்றும் போலந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள யூதர்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்கினர்.
1947ல் நாடு பிரிக்கப்பட்டது. ஆரம்ப ஆண்டுகள் கொந்தளிப்பாக இருந்தன என்பது மட்டுமல்ல, தனியார் தொழில்முனைவோர் தேசியமயமாக்கல், வன்முறை, வகுப்புவாதம் போன்றவற்றால் தங்கள் செல்வங்கள் பறிபோகும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். இந்திய யூதர்களும் ‘அவர்களுடைய சொந்த தேசத்தில்’ குடியேறி, இஸ்ரேலை உருவாக்கினர்.
ஆரம்ப தசாப்தங்களில் அங்கு வந்த இந்தியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த வெள்ளை யூதர்களின் இனப் பாகுபாடுகளை எதிர்கொண்டனர்.
இந்திய யூதர்களுக்கு வெள்ளைக்கார கடைக்காரர்களால் வெள்ளைக்கு பதிலாக கருப்பு ரொட்டி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக மற்றும் சாதாரண வீடுகளில் வாழ வேண்டியிருந்தது. இது இந்தியாவில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை விட மிகவும் குறைவாக இருந்தது. அவர்கள் மற்ற நாடுகளில் இருந்து மற்ற யூதர்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை மற்றும் அங்கீகாரத்திற்காக போராட வேண்டியிருந்தது.
நிறவெறி எத்தியோப்பியாவில் கறுப்பின யூதர்களை நியாயமற்ற முறையில் நடத்தியது. ஒருமுறை கருப்பின யூதர்கள் தானம் செய்த ரத்தம் கூட, எய்ட்ஸ் தொற்றுக்கு பயந்து தூக்கி எறியப்பட்டது.
எத்தியோப்பியாவில் கருப்பின யூதப் பெண்களுக்கு அவர்களுக்குத் தெரியாமல் கருத்தடை ஊசி போடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது போன்ற நிலையில், அவர்களின் மக்கள்தொகையில் வழக்கத்திற்கு மாறான சரிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த தகவல் ஒரு ஆவணப்படத்தின் அடிப்படையில் வெளியானதும் அச்சமூகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் பெனே மினாஷே, இஸ்ரேலைப் பார்க்க வேண்டும் என்று கனவு காணும் சமூகமாகவே இருக்கின்றது. சமீபத்திய வன்முறைக்குப் பிறகு அந்த சமூகத்தின் ஆசை அதிகரித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள யூத சமூகம் இஸ்ரேலில் குவிகிறது?
பைபிளில் முன்னறிவிக்கப்பட்டபடி, உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேலில் கூடுவார்கள். யோசேப்பின் மகன்களான மினாஷே மற்றும் ஆப்ரஹாமின் மகன்கள் பண்டைய இஸ்ரவேலர்களை வழிநடத்துவார்கள்.
இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் மினாஷே சமூகத்தினர், இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் பணியாற்றுகின்றனர். எனவே அந்த கணிப்பு உண்மை என்று பைபிள் சொல்வதை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள்.
பைபிளில், “பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உங்கள் பிள்ளைகளை கிழக்கிலிருந்து கூட்டிச் செல்வேன்,” எனக்கூறப்பட்டுள்ளது.
“வடக்கே அவர்களை ஒப்படைத்துவிடுங்கள் என்றும், தெற்கே அவர்களைத் தடுக்காதீர்கள் என்றும் சொல்வேன்.”
“தூரத்திலிருந்து என் மகனையும், பூமியின் எல்லைகளிலிருந்து என் மகள்களையும் அழைத்து வாருங்கள்.”