வடிவேலு தன்னை ஆள் வைத்து அடித்ததாக நடிகர் சுகுமார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை. சூழல் இப்படி இருக்க அவரை சுற்றிய பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.
அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர். எனவே வடிவேலு தனது ஸ்டைலை மாற்றி தற்கால சினிமாவுக்குள் விரைவில் கலப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் பல பேட்டிகளில் சொன்னபடியே இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தாலும் அவரை சுற்றி சுமூகமான சூழல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். ஒன்றிரண்டு பேருடன் நின்றுவிடும் என நினைத்தால் அந்தப் பட்டியல் மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்தவகையில் நடிகர் சுகுமார் மீண்டும் ஒரு பகீர் சம்பவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆள் வைத்து அடித்த வடிவேல்
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒருமுறை வடிவேலுவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அப்போது போண்டா மணியும், முத்துக்காளையும் வந்து என்னிடம் உங்களை வடிவேலு பார்க்க விரும்புவதாக சொன்னார்கள்.நான் உடனே மகிழ்ச்சியாகி அடடா நம் குருநாதரை பார்க்கப்போகிறோமே என்ற பெரும் ஆவலோடு பொக்கே எல்லாம் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.
மருத்துவமனைக்கு சென்ற நான், ‘அண்ணே வணக்கம். குரு இல்லாம வித்தை கத்துகிட்ட மாதிரி அண்ணே’என்றேன். உடனே அவர் ஆமாம்யா என் வயித்துல பிறந்தவன் மாதிரியே நீ இருக்கனு என் ஆத்தா சொல்லும்யா என சொல்லி பேசிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் போண்டா மணியையும், முத்துக்காளையையும் வெளியே அனுப்பிவிட்டார்கள்.
அதற்கு பிறகு என்ன ப்பா நீ பல கம்பெனில போயி என்ன மாதிரி நடிப்பேனு சொல்றியாமேனு கேட்டாரு. அண்ணே உங்கள மாதிரி நடிப்பேனு உலகத்துக்கே தெரியும். அது ஷோவுல பண்ணுவேன் சினிமால இல்லை என்றேன். இல்லையே ஒரு படத்துல என்ன மாதிரி நடிச்சிருக்கியாமே என சொன்னார் அவர்.அதற்கு நான், இல்லை அண்ணே அப்படி ஒரு சூழல் அமைஞ்சு போச்சு. இனி அப்படி எதுவும் பண்ணமாட்டேன்.மதுரைல உங்கள மாதிரி நடிச்சுதான் தங்கச்சிகளை எல்லாம் படிக்க வைத்தேன் என சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி இருந்து ஒருவர், என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுற என்று சொல்லி கீழே தள்ளிவிட்டார்.
அதுக்கப்புறம் நல்லாவே அடி விழுந்தது. நான் இனி அப்படி பண்ணவே மாட்டேன் அண்ணே. ஊர விட்டு ஓடி போயிடுறேன் என கூறிவிட்டு வீட்டுக்கு ஒருவழியாக வந்துட்டேன். நான் வீட்டுக்கு வந்ததும் என் முகம் வீங்கியிருந்ததையும், சட்டை கிழிந்திருந்ததையும் பார்த்த மனைவி மீனா என்ன ஆச்சு என கேட்டார். நானோ, இல்லை வண்டிலேர்ந்து கீழே விழுந்துட்டேன் என்றேன். உடனே அவர் வண்டியை போய் பார்த்து என்ன வண்டிக்கு ஒன்னும் ஆகல கீழ விழுந்துட்டேன்னு சொல்றீங்கனு கேட்டார். ஒருவழியா சமாளிச்சு நைட்டு தூங்க போயிட்டேன்.ஆனா தூக்கமே வரல. சொன்னா நம்பமாட்டீங்க தற்கொலை எண்ணம் எல்லாம் வந்துவிட்டது. என்னடா இது நம்ம ஒரு மாதிரி நினைச்சோம் இங்க வேற மாதிரி நடக்குதே என தோன்றியது. ஒருகட்டத்துக்கு மேல் எனது மனைவியிடம் அனைத்தையும் சொல்லி அழ ஆரம்பித்துவிட்டேன். அதற்கு அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார், “ஏங்க ஒருத்தர் உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு இணையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியாதுனு சொன்னார்” என சுகுமார் அந்தப் பேட்டியில் பேசினார். அவரது இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சுகுமார் ஒருசில மேடைகளில் வடிவேலுவை இமிடேட் செய்து நடித்தவர். ஆனால் அவருக்கென்று தனியான ஸ்டைல் ஒன்றும் இருக்கிறது. காதல் படத்தில் அவரது காமெடி அனைத்துமே தனித்துவமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.குறிப்பாக பரத்துக்கும், சந்தியாவுக்கும் திருமணம் செய்துவைக்கும் காட்சியில் தனது நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். காதல் படம் தவிர்த்து வல்லவன், விருமாண்டி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.